இணைய வழி சேவைகளுக்கான கைபேசி செயலி
இணைய வழி சேவைகளுக்கான கைபேசி செயலி, இந்தியாவில் பெரியளவிலான மாற்றங்கள் தொடர்பான நீதிமன்றத் தகவல்களை வழங்கும் கருவியாக உள்ளதால் டிஜிட்டல் இந்தியா விருதைப் பெற்றுள்ளது. இணைய வழி நீதிமன்றங்கள் சேவைக்கான கைபேசி செயலி கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது. வழக்கின் நிலை, வழக்குப்பட்டியல்கள், நீதிமன்ற ஆணைகள் போன்றவற்றை இந்த செயலியின் வாயிலாக் அறிந்து கொள்ள இயலும். இந்த சேவைகள் 24*7 என அனைத்து நேரங்களிலும் கிடைக்கப் பெறுகிறது. இது நீதித்துறை உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள், வழக்காடிகள், காவல் துறையினர், அரசு முகமைகள் மற்றும் ஏனைய பொறுப்பாளர்களுக்கு இது பயனுள்ள கருவியாக அமைந்துள்ளது. சி.என்.ஆர், (நீதிமன்றம் அல்லது தாலுக்கா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒவ்வொரு வழக்கிற்கும் ஒதுக்கிடப்பட்ட தனித்துவமான எண்) தரப்பினரின்பெயர், வழக்குரைஞர் பெயர் போன்ற பல்வேறு அளவுகோல்களைக் கொண்டு நீதிமன்ற அமைப்பு முறையில் நிலுவையிலுள்ள வழக்குகள் தொடர்பான தரவினை மீட்டெடுக்க உதவுகிறது.
மாவட்ட மற்றும் தாலுக்கா நீதிமன்றங்களுக்காக, தேசிய நீதித்துறை தரவு வலையமைப்பில் இருக்கக்கூடிய தரவினை இந்த கைபேசி செயலி வாயிலாக அணுக இயலும். பதிவிறக்கம் செய்யப்பட்டவற்றின் எண்ணிக்கை 46,50,000 (4.65 மில்லியன்) ஐ கடந்து இந்த செயலியின் புகழ் மற்றும் பயன்பாட்டை காட்டுகிறது.
இந்த செயலி கியூ ஆர் குறியீட்டு அம்சத்துடன் நாளது வரையிலாக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் வாயிலாக பயனாளர்/வழக்காடி ஒருவர் கைபேசியிலேயே வழக்கு விவரங்களைப் பெற இயலும். இந்த கியூ ஆர் குறியீட்டை இணைய வழி நீதிமன்றங்களின் வலைதளம் மற்றும் இணையவழி சேவைகளிலிருந்து பெற இயலும். இது ’வழக்கின் முழுமையான விவரங்கள்’ என்ற முக்கிய அம்சத்தையும் கொண்டுள்ளது. இதனால் ஒரு குறிப்பிட்ட வழக்கின் தொடக்க விசாரணை தேதியிலிருந்து அதன் தற்போதைய நிலை வரை தொடர்புடைய அனைத்து நிகழ்வுகள் மற்றும் வெளியிடப்பட்ட ஆணைகளை ஒருவர் பார்வையிட இயலும். வழக்குகளின் தீர்ப்புகள் மற்றும் வெளியிடப்பட்ட ஆணைகளை காண்பதற்கான இணைப்புகள் செயலியிலேயே வழங்கப்பட்டுள்ளது. வழக்குப் பட்டியல் குறித்த தரவு அம்சம் வழக்குரைஞர்களுக்கான வழக்குப் பட்டியல்களை உருவாக்க உதவுகிறது.