Close

    ஐ,சி,ஜே,எஸ்

    ICJS

    இந்திய உச்சநீதிமன்றத்தின் மின்னணுக் குழுவானது ‘இந்திய நீதித்துறையில் தகவல் தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதற்கான தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டம்’ தயாரித்ததன் பின்னர், நீதித்துறையில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முறை தொடங்கியது. நீதிமன்றங்கள், காவல்துறை, சிறைச்சாலைகள் மற்றும் தடய அறிவியல் ஆய்வகங்கள் போன்ற குற்றவியல் நீதி அமைப்பின் பல்வேறு பிரிவுகளிடையே தரவுகள் மற்றும் தரவுத் தலைப்புகளை ஒரு தளத்திலிருந்து ஏனையவற்றுக்குத் தடையின்றி பரிமாறிக் கொள்வதற்கு இணையவழிக் குழுவின் ஒரு முன்முயற்சியாக இணை-செயல்பாட்டு குற்றவியல் நீதி அமைப்பு (ICJS) ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    ICJS தளத்தின் உதவியுடன், முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப் பத்திரிகைத் தகவல்களை அனைத்து உயர் நீதிமன்றங்கள் மற்றும் சார்பு நீதிமன்றங்கள் வாயிலாக அணுக இயலும். முதல் தகவல் அறிக்கை, வழக்கு குறிப்பு ஆவணம் மற்றும் குற்றப்பத்திரிகை ஆகியவை, நீதிமன்றங்களால் பயன்படுத்தப்படுவதற்கு ஏற்றவகையில் PDF வடிவில் காவல் துறையால் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இ-குழு, மற்றவற்றுடன், தகவல் பரிமாற்றத்திற்காக, தரவுகள் மற்றும் தரவுத் தலைப்புகள் தரநிலைப்படுத்தல், தரவு சரிபார்ப்பு, ஒப்புதல், பயனர் அடையாளம் / அணுகுதல், மின்னணு பதிவுகளை சேமிப்பதற்கான தொழில்நுட்ப உள்கட்டமைப்பை உருவாக்குதல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு மாநிலத்திலும் ICJS திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக, ICJS அமைப்பில் தரவை ஒருங்கிணைப்பதற்கு உதவியாக, இந்தியக் காவல் பணிகள் (IPS) அதிகாரியின் பணிகளை ஈடுபடுத்த வேண்டுமென உயர் நீதிமன்றங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. காவல்துறை நீங்கலாக, வருங்கால வைப்பு நிதி ஆணையம், வனத்துறை, நகராட்சி நிர்வாக அமைப்புகள், தொழிலாளர் நல வாரியங்கள், நகரமைப்புத்திட்ட அதிகாரிகள் மற்றும் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் போன்ற ஏனைய அரசு செயற்பாட்டாளர்களும் ICJS இயங்குதளத்தில் பங்கேற்பதை உறுதி செய்யும் வகையில் ஒருங்கிணைப்பாளர் ஒருவரையும் (பிரத்யேக அதிகாரியை) நியமிக்க வேண்டுமென உயர்நீதிமன்றங்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    வழக்குகளின் தொடர்புடைய அனைத்துத் தகவல்களும் நீதிமன்றங்களின் பயன்பாட்டிற்கு நிகழ்நேரத்தில் கிடைக்கப் பெறுவதால், ICJS இயங்குதளம், வழக்கு மற்றும் நீதிமன்ற நிர்வாகத்திற்கு உதவும் ஒரு சிறந்த கருவியாகத் திகழும். சிறப்பான நேரப் பயன்பாட்டை உறுதி செய்யும் இந்த இயங்குதளம், நீதித்துறை உத்தரவுகள் மற்றும் அழைப்புகளும் விரைவாகச் சென்றடைவதில் உதவும். குற்றவியல் நீதி அமைப்பின் செயல்பாட்டுத் திறனை தரரீதியாகவும் எண்ணிக்கை அளவிலும் மேம்படுத்துவதில் ICJS இயங்குதளம் ஒரு மைல்கல்லாக இருக்கும்.